14 இயந்திரங்கள்... 8 நாட்கள் நடந்த சோதனை! கொளத்தூர் தேர்தல் ரிசல்ட்... வாக்குப்பதிவு இயந்திர ஆய்வில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ...!!!
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக எழுப்பிய EVM சீல் மற்றும் டேக் சந்தேகங்கள் தொடர்பாக 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 8 நாட்கள் ஆய்வு செய்யப்பட்டதில் எந்த முறைகேடும் இல்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் தொடர்பாக திமுக முன்வைத்த சந்தேகங்களுக்கு இடையே, 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. எட்டு நாட்கள் நீடித்த இந்தச் சோதனையின் முடிவில், எந்த தொழில்நுட்பக் கோளாறோ அல்லது முறைகேடோ கண்டறியப்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீல்கள் மற்றும் டேக்குகள் குறித்து திமுக புகார்
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பயன்படுத்தப்பட்ட 14 வாக்குச்சாவடிகளுக்கான இயந்திரங்களில் சில சீல்கள் முறையாக இல்லை என்றும், சில இயந்திரங்களில் புதிய டேக்குகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட இயந்திரங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதி தேர்தல் ரிசல்ட்…! 11 வாக்குச்சாவடிகள் நிறைவு... அம்பலமான உண்மை தகவல்!!!
எட்டு நாட்கள் நடந்த விரிவான ஆய்வு
திமுக அளித்த புகாரைத் தொடர்ந்து, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை பொறியாளர் மற்றும் இரு உதவிப் பொறியாளர்கள் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இதில் திமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்களும் நேரில் பங்கேற்றனர்.
வி.வி.பேட் சரிபார்ப்பு... அதிகாரப்பூர்வ விளக்கம்
ஆய்வின் போது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டதுடன், வி.வி.பேட் சீட்டுகளும் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டன. பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பொறியாளர்கள் உடனுக்குடன் விளக்கம் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வின் இறுதியில் அனைத்து இயந்திரங்களும் விதிமுறைகளுக்கு இணங்க சரியாக செயல்பட்டதாகவும், வாக்கு எண்ணிக்கையில் எந்த முரண்பாடும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், எந்தவித சிக்கலும் கண்டறியப்படவில்லை என்றும் சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சமீரன் தெரிவித்துள்ளார். மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையிலும், 14 இயந்திரங்களும் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு எந்த முறைகேடும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: ஷாக் நியூஷ்! கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு ரிசல்ட்.... அம்பலமான அதிர்ச்சி உண்மையால் பரபரப்பு...!!!