பெண் நிர்வாகியிடம் அத்துமீறல்.... விருப்பதுக்கு மாறாக செய்த கருக்கலைப்பு! பாஜக கருப்பு முருகானந்தம் மீது அடுக்கடுக்கான புகார்... உடனடியாக அதிரடி ஆக்ஷன் எடுத்த மேலிடம்...!!!
பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது பெண் நிர்வாகி அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சிப் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்த கருப்பு முருகானந்தம் மீது பெண் நிர்வாகி ஒருவர் அளித்த புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். புகார் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், கருப்பு முருகானந்தத்தை கட்சிப் பொறுப்பில் இருந்து பாஜக தலைமை நீக்கியுள்ளது.
தேசிய தலைமையிடம் பெண் நிர்வாகி புகார்
பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிர்வாகியான திவ்யா சேஷாத்ரி, கட்சியின் தேசிய மற்றும் மாநிலத் தலைமையிடம் கருப்பு முருகானந்தம் மீது புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் கட்சிப் பொறுப்பில் இருந்த தன்னை, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தமிழகத்துக்கு வரவழைத்ததாகவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதியளித்ததாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கருக்கலைப்பு, மிரட்டல் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
கருப்பு முருகானந்தத்துடனான உறவில் தான் கர்ப்பமான நிலையில், தனது விருப்பத்துக்கு மாறாக கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும் பெண் நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தன்னையும் குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையிடமும் இணையவழியாக புகார் அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக பொறுப்பில் இருந்து நீக்கம்
புகார் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தத்தை மாநில பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை கருப்பு முருகானந்தம் மறுத்துள்ளார். முறையான விசாரணை நடத்தாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தன் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் மற்றும் சில ஆதாரங்கள் போலியானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். புகார் தொடர்பான முழு விவரங்களை அறிந்த பின்னர் விளக்கம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
பெண் நிர்வாகியின் குற்றச்சாட்டுகள் மற்றும் அதற்கு கருப்பு முருகானந்தம் அளித்துள்ள மறுப்பு ஆகிய இரு தரப்பிலும் கருத்துகள் வெளியாகியுள்ள நிலையில், விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை நிலவரம் கவனத்தை பெற்றுள்ளது.