இதெல்லாம் ரொம்ப தப்பு... அந்த கடையை உடனே நீக்குங்க..! சட்டமன்றத்தில் ஆவேசமாக எகிறிய சி.வி.சண்முகதிற்கு அமைச்சர் விக்னேஷ் பதிலடி.!!!
ஜம்போதி கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என சி.வி.சண்முகம் வலியுறுத்திய நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்வது மற்றும் மூடுவது தொடர்பான விவாதம் இன்று காரசாரமாக நடந்தது. மைலம் தொகுதியில் மூடப்பட்ட மதுக்கடை ஒன்றை ஜம்போதி கிராம எல்லைக்கு மாற்றி திறந்துள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார். இதற்கு அமைச்சர் அளித்த விளக்கத்தையும் ஏற்க மறுத்த அவர், அந்தக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என ஆவேசமாக வலியுறுத்தினார்.
ஜம்போதியில் கடை திறந்ததற்கு சி.வி.சண்முகம் எதிர்ப்பு
சட்டப்பேரவையில் பேசிய சி.வி.சண்முகம், தனது மைலம் தொகுதிக்குட்பட்ட செஞ்சி நகரில் இருந்த மதுக்கடை ஒன்று மூடப்பட்ட பின்னர், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஜம்போதி கிராம எல்லையில் புதிதாக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாவட்ட நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையிலேயே கடை மாற்றப்பட்டதாக அமைச்சர் விளக்கம் அளித்த நிலையில், அதை சி.வி.சண்முகம் மறுத்தார். நகரப் பகுதியில் இருந்த கடையை கிராமத்திற்கு மாற்றியது சரியான முடிவு அல்ல என்றும், “தயவு செய்து அந்த கடையை நீக்கி விடலாம்” என்றும் அவர் அவையில் வலியுறுத்தினார்.
சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த பாமக எம்.எல்.ஏ.
அப்போது குறுக்கிட்ட பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார், ஜம்போதி கிராமம் தனது தொகுதிக்குட்பட்ட பகுதி என்பதை சுட்டிக்காட்டினார். அப்பகுதி மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில், அந்த இடத்தில் மதுக்கடை வேண்டாம் என கோருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு பதிலாக, ஜம்போதி மதுக்கடையையே முழுமையாக மூட வேண்டும் என கணேஷ்குமார் வலியுறுத்தினார். இதனால் அவையில் மதுக்கடை தொடர்பான விவாதம் மேலும் சூடுபிடித்தது.
717 மதுக்கடைகள் மூடப்பட்டதாக அமைச்சர் விளக்கம்
சட்டமன்ற உறுப்பினர்களின் தொடர் எதிர்ப்புக்கு பதிலளித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் அடிப்படையில்தான் ஜம்போதியில் கடை திறப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். இருப்பினும், உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுவது போல் விதிமீறல் அல்லது தவறு இருப்பது தெரியவந்தால், அரசு அதனை நிச்சயம் பரிசீலிக்கும் என உறுதியளித்தார்.
தமிழகத்தில் இதுவரை 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டால், அந்த கடைகளின் முழுப் பட்டியலையும் அவற்றின் முகவரிகளுடன் அன்றைய மாலையே வழங்க தயாராக இருப்பதாக அவர் கூறினார். இதையடுத்து, நீண்ட நேரம் நடைபெற்ற விவாதம் சுமுகமாக முடிவுக்கு வந்தது.