எங்களுக்கும் நக்கல், நய்யாண்டி, குட்டிக் கதை எல்லாம் தெரியும்... திமுகவை தனது ஸ்டைலில் சீண்டிய CM விஜய்! விழுந்து விழுந்து சிரித்த எடப்பாடி..... செம டிரெண்டிங் வீடியோ வைரல்..!!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் நிறைவு நாளில் திமுகவை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர் விஜய், திமுக வெளிநடப்புக்குப் பிறகு கூறிய குட்டிக்கதை அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரின் நிறைவு நாளில் அரசியல் சூடு உச்சத்தை எட்டியது. முதலமைச்சர் விஜய் தனது பதிலுரையின் போது பிரதான எதிர்க்கட்சியான திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
திமுக வெளிநடப்பால் பரபரப்பு
அவையில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுகவின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமர்வில் இருக்காமல் வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் சில நிமிடங்கள் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: சற்று முன்.... சட்டமன்றத்தில் திடீர் பரபரப்பு! எடப்பாடி தலைமையில் அதிமுக வெளிநடப்பு....!!!
சபாநாயகர் அனுமதியுடன் குட்டிக்கதை
திமுக உறுப்பினர்கள் வெளியேறிய பிறகு தனது உரையைத் தொடர்ந்த முதலமைச்சர் விஜய், சபாநாயகரை நோக்கி “எனக்கு ஒரு குட்டிக்கதை சொல்லத் தோன்றுகிறது, சொல்லலாமா?” என்று கேட்டார். அனுமதி கிடைத்ததும் தனது பாணியில் கதையைத் தொடங்கினார்.
அவர் கூறிய கதையில், வெயிலில் கண்களை மறைத்தபடி ஒருவரைத் தேடிக்கொண்டிருந்த பெரியவரிடம் ஒரு சிறுவன் காரணம் கேட்டதாகவும், அதற்கு “உங்கள் அப்பா இங்கே இருப்பார் என்று சொன்னார்கள்; அதனால்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று அந்தப் பெரியவர் பதிலளித்ததாகவும் குறிப்பிட்டார்.
அவையில் சிரிப்பலை
முதலமைச்சரின் நக்கல் கலந்த இந்தக் கதைக்கு அவையில் இருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிரிப்புடன் எதிர்வினை அளித்தனர். அதன்பின் மீண்டும் பேசிய விஜய், “எங்களுக்கும் நக்கல், நையாண்டியாக குட்டிக்கதை சொல்லத் தெரியும். அந்தக் கதையில் வந்த பெரியவர் அப்படித்தான் சொன்னார். யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இதற்காக யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.