விஜய் மாமா..! இதுக்கு உடனே ஆக்ஷன் எடுங்க..! முதல்வர் விஜய்யிடம் 7 வயது சிறுமி கேட்ட கோரிக்கை..!!!
தாமிரபரணி ஆற்றின் மாசுபாடு குறித்து 7 வயது சிறுமி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வர் விஜய்க்கும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தற்போதைய மோசமான நிலையை அவர் மழலை மொழியில் எடுத்துரைத்த விதம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள தாமிரபரணி ஆறு, தற்போது கடுமையான மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சிறுமி தனது வீடியோவில் கூறியுள்ளார். ஆற்றில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் மாறிவரும் நீர்நிலையின் நிலை குறித்து அவர் வேதனையுடன் பேசியுள்ளார்.
“விஜய் மாமா.. ஆக்ஷன் எடுங்க”
வீடியோவில் தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரடியாகக் குறிப்பிட்டு, “விஜய் மாமா.. இதுக்கு ஆக்ஷன் எடுங்க” என சிறுமி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆற்றை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பலரும் அந்தச் சிறுமியின் சமூக அக்கறையை பாராட்டி கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
அரசு நடவடிக்கை கோரி கோரிக்கை
தாமிரபரணி ஆற்றை சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று சிறுமி தனது வீடியோவில் வலியுறுத்தியுள்ளார். ஆற்றின் தூய்மையை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்பதையும் அவர் எளிய வார்த்தைகளில் நினைவூட்டியுள்ளார்.
ஒரு சிறுமியின் இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமும் பேசுபொருளாக மாறியுள்ளது.