தேர்வில் காப்பி அடித்ததாகக் கூறி 8-ஆம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கி... இரு கைகளும் உடைத்த ஆசிரியர்.! இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி...!!!
உத்தர பிரதேசத்தில் தேர்வில் காப்பி அடித்ததாகக் கூறி ஆசிரியை தாக்கிய 13 வயது மாணவி உயிரிழந்தார். பள்ளி முதல்வர், ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோயில், பள்ளி ஆசிரியை தாக்கியதாகக் கூறப்படும் நிலையில் 13 வயது மாணவி உயிரிழந்துள்ளார். தேர்வில் காப்பி அடித்ததாகக் கூறி 8-ஆம் வகுப்பு மாணவி க்ஷமா தீக்ஷித்தை ஆசிரியை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழந்ததை அடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்வில் காப்பி அடித்ததாகக் கூறி தாக்குதல்
ஹர்டோயில் உள்ள அரசு பள்ளியில் க்ஷமா தீக்ஷித் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். தேர்வின்போது காப்பி அடித்ததாகக் கூறி வகுப்பு ஆசிரியர் ராஜேந்திர கங்வார், மாணவியை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதில் அவரது இரு கைகளும் முறிந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: சாலையில் சாமியார் வேடமிட்டு நைசாக பேசி நகைகளை திருடிய போலி சாமியார்கள்! காரில் பெண்களிடம் நடந்த கொள்ளை... அதிர்ச்சி காட்சி!!!
மாணவியைப் பற்றி புகார் அளிக்க பள்ளிக்கு சென்ற அவரது தந்தை உமேஷ் தீக்ஷித்தையும் அங்கிருந்த ஆசிரியர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
சிகிச்சை பலனின்றி 13 வயது மாணவி உயிரிழப்பு
ஆரம்ப கட்ட சிகிச்சைக்குப் பிறகு க்ஷமா தீக்ஷித்தின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அவர் ஃபரூகாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர் அச்சே சிங் யாதவ் மற்றும் வகுப்பு ஆசிரியர் ராஜேந்திர கங்வார் ஆகியோர் துறை ரீதியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் மரணத்துக்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டெல்லி அரசுப் பள்ளியிலும் மாணவிக்கு கொடுமை
இதற்கிடையே டெல்லி மயூர் விஹாரில் உள்ள அரசுப் பள்ளியிலும் மாணவியை தண்டித்ததாக மற்றொரு புகார் வெளியாகியுள்ளது. 7-ஆம் வகுப்பு மாணவி புத்தகம் கொண்டு வரவில்லை என்பதற்காக வெயிலில் நிற்க வைக்கப்பட்டதுடன், பின்னர் கழிப்பறையில் பூட்டி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை முறைகள் குறித்து அடுத்தடுத்து புகார்கள் வெளியாகி வரும் நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.