சாலையில் சாமியார் வேடமிட்டு நைசாக பேசி நகைகளை திருடிய போலி சாமியார்கள்! காரில் பெண்களிடம் நடந்த கொள்ளை... அதிர்ச்சி காட்சி!!!
உத்தரபிரதேசத்தில் சாமியார் வேடமிட்டு கார்களை வழிமறித்து பெண்களிடம் நகை, பணம் பறித்த இருவர் ஹரித்வாரில் கைது செய்யப்பட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்நகரில் சாமியார் வேடமிட்டு பெண்களை ஏமாற்றி நகை, பணம் கொள்ளையடித்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜஹாங்கீர், குர்விந்தர் ஆகியோர் கார்களில் சென்று கொண்டிருந்த பெண்களை குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு பெண்ணிடம் நைசாக பேசி நகைகளை திருடிய காட்சிகள் டேஷ்கேமில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளன.
சாமியார் வேடத்தில் பெண்களை குறிவைத்த இருவர்
பிஜ்நகரைச் சேர்ந்த ஜஹாங்கீர் மற்றும் குர்விந்தர் ஆகியோர் சாமியார் போல் வேடமிட்டு கார்களை வழிமறித்துள்ளனர். பின்னர், காரில் இருந்த பெண்களிடம் பேச்சு கொடுத்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பி நகைகளை நைசாக பறித்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு பெண்ணின் தாலிச்சங்கிலி, தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் நூதன முறையில் திருடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி கொடூர கொலை.. காதலன் வெறிச்செயல்.. அதிரவைக்கும் பரபரப்பு சம்பவம்.!
டேஷ்கேமில் சிக்கிய கொள்ளை காட்சி
பெண்ணிடம் பேசி நகைகளை திருடும் காட்சிகள் மற்றொரு காரின் டேஷ்கேமில் பதிவாகியிருந்தன. அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் ஹரித்வாரில் போலீசார் கைது செய்தனர்.
கொள்ளையடித்த நகைகள் மீட்பு
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிஜ்நகர் காவல் கண்காணிப்பாளர் காவல் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்து வழக்கின் விவரங்களை வெளியிட்டார். இருவர் மீதும் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலையில் சாமியார் வேடத்தில் வந்து பேசுபவர்களை நம்பி நகை, பணத்தை ஒப்படைக்க வேண்டாம் என்றும், குறிப்பாக பெண்கள் போலி சாமியார்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.