பிரசவத்தில் இறந்தே பிறந்த பிஞ்சு குழந்தை! அடுத்து சில மணி நேரத்தில் தாயும் இறப்பு...! நடந்தது என்ன? மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்...!!!
தெலங்கானா மஞ்சேரியால் தனியார் மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணி உயிரிழந்ததால் பரபரப்பு. தவறான சிகிச்சை என உறவினர்கள் குற்றச்சாட்டு; மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்.
தெலங்கானா மாநிலம் மஞ்சேரியாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்தின்போது உயிரிழந்தார். அவருக்கு பிறந்த குழந்தையும் உயிரிழந்த நிலையில் இருந்தது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையே பெண்ணின் மரணத்துக்கு காரணம் எனக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரசவத்தின்போது குழந்தை உயிரிழப்பு
மஞ்சேரியால் அருகே குடிபேட்டை கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண், பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவம் நடைபெற்ற நிலையில், குழந்தை இறந்தே பிறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாலை 2 மணியளவில் கர்ப்பிணிப் பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்
பெண்ணின் உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டனர். மருத்துவர்களின் தவறான சிகிச்சை மற்றும் அலட்சியத்தால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வலிப்பு ஏற்பட்டதே காரணம் என மருத்துவமனை விளக்கம்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பெண்ணின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர். அதேநேரத்தில், பிரசவத்தின்போது பெண்ணுக்கு வலிப்பு ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து குடும்பத்தினருக்கு முன்கூட்டியே எச்சரித்ததாகவும் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பிரேதப் பரிசோதனை மற்றும் காவல்துறை விசாரணையின் முடிவிலேயே உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும்.