பீச்சில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் மீது விழுந்த துருப்பிடித்த மின்கம்பம்! துடிதுடித்து பரிப்போன உயிர்...!!!
புதுச்சேரி கடற்கரையில் துருப்பிடித்த அலங்கார மின்கம்பம் விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தார். அலட்சியம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி கடற்கரையில் நேற்று மாலை நடந்த சோக சம்பவத்தில், துருப்பிடித்து வலுவிழந்த அலங்கார மின்கம்பம் விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தான். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியின் மகனான பைசல், கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. படுகாயமடைந்த சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்த மின்கம்பம்
புதுச்சேரி கடற்கரைக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் வந்து செல்கின்றனர். இங்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தஸ்லீம் - ரிகானா தம்பதியினர் பொம்மைகள் விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். அவர்களது 5 வயது மகன் பைசல், கடற்கரையில் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது நீண்ட நாட்களாக துருப்பிடித்து காணப்பட்ட அலங்கார மின்கம்பம் திடீரென வேருடன் வலுவிழந்து சிறுவனின் மார்பில் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பைசலை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
பராமரிப்பு குறைபாடுகள் குறித்து மக்கள் புகார்
கடற்கரை பகுதியில் பழுதடைந்த இருக்கைகள், வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் மின்கேபிள்கள், அடிப்பகுதியில் துருப்பிடித்த மின்கம்பங்கள் என பல்வேறு ஆபத்துகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தனர். அவற்றை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, சுமார் 10 நாட்களுக்கு முன்பும் இதே கடற்கரையில் துருப்பிடித்த மின்கம்பம் ஒன்று சாய்ந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததே தற்போது 5 வயது சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமாகிவிட்டதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
சிறுவனின் உயிரிழப்பைத் தொடர்ந்து கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெரியகடை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்பில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படும் மின்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, மின்கம்பம் முறையாக பராமரிக்கப்பட்டதா, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து முன்கூட்டியே புகார்கள் வந்தனவா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சேதமடைந்த மின்கம்பங்கள் உள்ளிட்ட ஆபத்தான கட்டமைப்புகளை உடனடியாக கண்டறிந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தற்போது மீண்டும் எழுந்துள்ளது. பைசலின் உயிரிழப்புக்கு காரணமான சூழல் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.