12 ஆம் வகுப்பு முடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! பிஜி அறையில் வீசிய துர்நாற்றம்... கதவை திறந்த போலீஸ்கு காத்திருந்த பேரதிர்ச்சி! திடுக்கிடும் பின்னணி...!!!
நொய்டா பிஜி விடுதியில் அசாமைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் மகேக் அகமது கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தலைமறைவான இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அசாமைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் மகேக் அகமது கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரோலா கிராமத்தில் உள்ள பன்சல் கோயில் அருகே இருக்கும் பிஜி விடுதியில் இந்த கொலை நடந்துள்ளது. அதே கட்டிடத்தில் வசித்து வந்த இளைஞரின் அறையில் இருந்து மகேக்கின் சடலம் மீட்கப்பட்டது. அவரது உடலில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று வாரங்களுக்கு முன்பு நொய்டா வந்த இளம்பெண்
அசாமின் டிப்ருகர் பகுதியைச் சேர்ந்த மகேக் அகமது, பெற்றோரிடம் தெரிவிக்காமல் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு நொய்டாவுக்கு வந்துள்ளார். பின்னர் அசாமைச் சேர்ந்த தனது தோழியான 18 வயது சஞ்சனாவுடன் பரோலா கிராமத்தில் உள்ள பிஜி விடுதியில் தங்கியிருந்தார். மகேக் 12ஆம் வகுப்பு படிப்பை முடித்திருந்ததாக கூறப்படுகிறது.
அதே கட்டிடத்தில் பிகார் மாநிலம் கட்டிஹார் பகுதியைச் சேர்ந்த ரமண் என்ற இளைஞரும் வசித்து வந்துள்ளார். பி.டெக் படித்துள்ள அவர், முன்பு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக அவர் வேலை இல்லாமல் இருந்ததாக அங்கு வசித்தவர்கள் கூறியுள்ளனர்.
வாக்குவாதத்துக்குப் பிறகு நடந்தது என்ன?
ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு மகேக்கும் சஞ்சனாவும் அறைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தனர். அப்போது ரமண் தனது அறைக்கு வெளியே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு நடந்த சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துர்நாற்றம் வீசிய அறையில் சடலம் மீட்பு
ஆகஸ்ட் 9ஆம் தேதி சஞ்சனா வெளியே சென்றிருந்த நிலையில், மகேக் பிஜி அறையிலேயே இருந்துள்ளார். சஞ்சனா திரும்பி வந்தபோது மகேக்கை காணவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோதும் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் ரமணின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதால், அங்கு தங்கியிருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த அறைக்கு வெளியே பூட்டு போடப்பட்டிருந்த நிலையில் ரமண் அங்கு இல்லை. இதையடுத்து கட்டிட உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 10ஆம் தேதி போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அறையின் பூட்டைத் திறந்து சோதனையிட்டபோது, உள்ளே மகேக் அகமதுவின் சடலம் கிடந்தது. மகேக் அகமது கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மகேக்கின் செல்போனையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் பதிவாகியுள்ள அழைப்புகள், உரையாடல்கள் உள்ளிட்ட தகவல்களை ஆய்வு செய்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரமணை பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். நொய்டா போலீஸார் கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அடி ஆத்தீ.... கரை ஏறிய முதலைக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து பூஜை செய்த அர்ச்சகர்! அலறி அடித்து ஓடிய பக்தர்கள்... பகீர் காட்சி!!!