இப்படி ஒரு நிலைமையா? விளையாடும் வயதில் தண்ணீரிலே வாழ்க்கையை போக்கும் 16 வயது சிறுவன்! மருத்துவ உலகையே மிரள வைக்கும் அரிய நோய்...!!!
மேற்கு வங்கத்தில் அரிய நோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன், உடலில் எரிச்சல் ஏற்படுவதால் கடந்த 5 ஆண்டுகளாக பெரும்பாலான நேரத்தை தண்ணீரிலேயே கழித்து வருகிறார்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இக்பால் ஷேக், அரிய வகை உடல்நலப் பாதிப்பால் கடுமையான வேதனையை சந்தித்து வருகிறார். தண்ணீரை விட்டு வெளியே வந்தவுடன் உடல் முழுவதும் தீப்பற்றி எரிவது போன்ற வலி ஏற்படுவதால், கடந்த 5 ஆண்டுகளாக பெரும்பாலான நேரத்தை தண்ணீரிலேயே கழித்து வருகிறார். பள்ளிக்குச் சென்று நண்பர்களுடன் விளையாட வேண்டிய வயதில், அவரது அன்றாட வாழ்க்கையே நீருடன் பின்னிப் பிணைந்துள்ளது.
தண்ணீரை விட்டு வெளியே வந்தால் தாங்க முடியாத வலி
இக்பால் இரவு, பகல் என பெரும்பாலான நேரங்களில் குளத்திலேயே நீந்தியபடி அல்லது மிதந்தபடி இருக்கிறார். வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே கரைக்கு வருவதாக கூறப்படுகிறது. பசி எடுத்தாலும் தண்ணீரை விட்டு வெளியே வர முடியாத நிலை இருப்பதால், குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் உணவு, பழங்களை அவர் இருக்கும் இடத்திற்கே கொண்டு சென்று வழங்குகின்றனர்.
பல மணி நேரம் தொடர்ந்து தண்ணீரில் இருப்பதால், அவருக்கு அடிக்கடி கடுமையான சளி, இருமல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இருந்தபோதிலும், உடலில் ஏற்படும் தாங்க முடியாத வலியிலிருந்து தப்பிக்க தண்ணீரிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அரிய நோய்க்கு சிகிச்சை பெற நிதி திரட்டும் குடும்பம்
சிறுவனின் நிலை நாளுக்கு நாள் கவலைக்குரியதாக மாறியதைத் தொடர்ந்து, பெற்றோர் அவரை உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்தனர். இது அரிய வகை தோல் அல்லது நரம்பு பாதிப்பு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் ஆரம்பகட்டமாக சந்தேகித்துள்ளனர். இருப்பினும், நோய்க்கான சரியான காரணத்தை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க மேல் மருத்துவப் பரிசோதனைகளும், சிறப்பு சிகிச்சையும் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
உதவிக்காக காத்திருக்கும் இக்பால்
வறுமையில் வாழும் இக்பாலின் குடும்பத்தால் அதிக மருத்துவச் செலவுகளை தனியாக சமாளிக்க முடியவில்லை. இதனால் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் மருத்துவ சிகிச்சைக்கான நிதி திரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உரிய சிகிச்சை கிடைத்தால், இக்பால் மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் உதவியை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: அடி ஆத்தீ.... கரை ஏறிய முதலைக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து பூஜை செய்த அர்ச்சகர்! அலறி அடித்து ஓடிய பக்தர்கள்... பகீர் காட்சி!!!