கணவர் மரணத்தில் திடீர் திருப்பம்... மனைவி, மாமியார் கைது.. பின்னணியில் கள்ளத்தொடர்பு?
கணவர் மரணத்தில் திடீர் திருப்பம்... மனைவி, மாமியார் கைது.. பின்னணியில் கள்ளத்தொடர்பு?
பெங்களூரு பிடரஹள்ளி அருகே 40 வயது நபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கொலை வழக்காக மாறியுள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முபாரக் பாஷா (40), தனது மனைவி ஷாகினா பானு (37) உடன் கடந்த 10 மாதங்களாக கித்தகனூர் பிரதான சாலையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. குடும்பத் தகராறு காரணமாக இருவரும் சில காலம் தனித்தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
செப்டம்பர் 9-ம் தேதி அதிகாலை சுமார் 1 மணியளவில், முபாரக் பாஷா குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு ஷாகினா தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெங்களூரு வந்த முபாரக்கின் சகோதரர் ஷாகுல் மற்றும் உறவினர்கள், அவரது உடலைப் பார்க்க முயன்றபோது தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ஷாகுல், அவலஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் முபாரக்கின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், அவரது முகம், மூக்கு மற்றும் தாடைப் பகுதிகளில் காயங்கள் இருந்ததும், உடலில் பலத்த தாக்குதலுக்கான காயங்கள் காணப்பட்டதும் தெரியவந்தது. மேலும், அவர் மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நாற்காலியை நகர்த்தியதில் தகராறு… மாணவியை சரமாரியாக தாக்கிய சக மாணவன்.. அதிர்ச்சி வீடியோ!
இந்த கொலை தொடர்பாக முபாரக்கின் குடும்பத்தினர், அவரது மனைவி ஷாகினா, மாமியார் ஹசீனா ஜான், ஆசிப் மற்றும் நஹீம் உல்லா உள்ளிட்டோர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஷாகினாவுக்கும் நஹீம் உல்லாவுக்கும் இடையிலான தனிப்பட்ட தொடர்பு தொடர்பான பிரச்சினையே கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஷாகினா மற்றும் அவரது தாயார் ஹசீனா ஜான் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் மற்ற சந்தேக நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்களின் பங்கு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கடன் தொகையை கேட்டு பெண்ணை கடத்தி தாக்குதல்! ஆடைகளை அகற்றி வீடியோ.. பெங்களூருவில் அதிர்ச்சி!