பூமியில் இருந்து கொப்பளிக்கும் வெந்நீர்... தெலங்கானா கிராமங்களில் வியப்பூட்டும் காட்சி!
பூமியில் இருந்து கொப்பளிக்கும் வெந்நீர்... தெலங்கானா கிராமங்களில் வியப்பூட்டும் காட்சி!
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் மணுகுரு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடியில் இருந்து வெந்நீர் வெளியேறி வருவது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பாகிடேறு, கொல்லகொத்தூரு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள போர்வெல்கள், கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் சூடான நீர் கிடைப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மழை மற்றும் குளிரான காலங்களில் இந்த வெந்நீரில் இருந்து அதிக அளவில் நீராவி வெளியேறுவதால், அதிகாலையில் கிராமப் பகுதிகள் முழுவதும் வெள்ளைத் திரை போல் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. கால்வாய்கள் மற்றும் பம்புசெட்டுகளில் இருந்து வரும் நீரிலும் நீராவி எழுவதால், தரையில் மேகங்கள் நகர்வது போன்ற வித்தியாசமான காட்சி காணப்படுகிறது.
அப்பகுதியில் சுமார் 1,000 மீட்டர் ஆழம் வரை போர்வெல் அமைத்தபோது வெந்நீர் கிடைத்ததாகவும், சில விவசாயிகள் அந்த நீரை பாசனத்திற்குப் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் நிலத்தடி வெப்பம் தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: கணவன் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. ஏலூர் அருகே சோகம்!
மணுகுரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் நிலக்கரி வளம் நிறைந்த பகுதிகளாக உள்ளன. பூமிக்கு அடியில் உள்ள நிலத்தடி பாறைகளின் வெப்பம் (Geothermal energy) அல்லது நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் ஏற்படும் நிலத்தடி வெப்ப மாறுபாடுகள் காரணமாக, அங்குள்ள நீர் சூடாக்கப்பட்டு குழாய்கள் மற்றும் கிணறுகள் வழியாக வெளியேறுவதாக கூறப்படுகிறது.
இதற்கான அறிவியல் காரணம் குறித்து மேலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பம்புசெட்டுகள் மற்றும் போர்வெல்களில் இருந்து வெந்நீர் வெளியேறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. வெந்நீரை நேரடியாக குடிநீராக பயன்படுத்தாமல், குளிரவைத்த பின்னர் பயன்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.