தூக்கில் தொங்கிய நிலையில் பெற்றோர்..... படுக்கையில் 2 குழந்தைகளின் சடலம்! வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் இருக்கும் பகீர் உண்மை.!!!
சத்தீஸ்கரில் நிதி நெருக்கடியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தம்பதியினர் தூக்கில் தொங்கிய நிலையிலும், இரண்டு குழந்தைகள் படுக்கையில் உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
உயிரிழந்தவர்கள் கோவிந்த் சாஹு, அவரது மனைவி சஞ்சல் சாஹு மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மோகன் நகர் காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள், வீட்டை முழுமையாக ஆய்வு செய்தனர்.
வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கடிதம்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்பம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததாக தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்து மீட்கப்பட்ட கடிதத்தில் பணப் பிரச்சினை மற்றும் குடும்ப அழுத்தங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கோவிந்த் சாஹு, மன உளைச்சலில் இருந்திருக்கலாம் என்றும், முதலில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து பின்னர் மனைவியுடன் சேர்ந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திருப்பதி பயணத்துக்குப் பிறகு அதிர்ச்சி
சில நாட்களுக்கு முன்புதான் இந்த குடும்பம் திருப்பதி பாலாஜி கோயிலுக்கு சென்று வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அக்கம் பக்கத்தினரிடம் இயல்பாகவே பழகி வந்த குடும்பம் திடீரென இத்தகைய முடிவை எடுத்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தீவிர விசாரணை நடத்தும் போலீசார்
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. மேலும், குடும்பத்தினரின் கைபேசிகள் மற்றும் பிற ஆதாரங்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பதையும் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குழந்தை இழப்பினால் குறையாத துக்கம்! விபரீத முடிவெடுத்த தாயும் மகளும்.. வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!