மேடையிலேயே மணமகள் மாப்பிளையிடம் கேட்ட ஒற்றை கேள்வி! பதில் தெரியாமல் திணறியதால்.... அடுத்த நிமிடம் திருமணத்தை நிறுத்திய பெண்...! இது தெரியாமல் இவன் கூட எப்படி வாழ்க்கை நடத்துறது..?
உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம் வாய்ப்பாட்டைக் கூற முடியாத மணமகனை திருமணம் செய்ய மறுத்த மணமகள், திருமணத்தை நிறுத்தி மணமகன் வீட்டாரை திருப்பி அனுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில், மணமேடையிலேயே திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகன் படித்தவர் எனக் கூறி திருமணம் பேசி முடிக்கப்பட்ட நிலையில், அவர் அடிப்படை கணக்கான இரண்டாம் வாய்ப்பாட்டை கூட கூற முடியாததால் மணமகள் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, திருமணத்தை நடத்த மறுத்த அவர் மணமகன் வீட்டாரை திருப்பி அனுப்பியுள்ளார்.
மணமேடையில் எழுந்த சந்தேகம்
திருமணத்துக்காக மண்டபம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, மணமகன் பராத் ஊர்வலத்துடன் உறவினர்கள் புடைசூழ வந்திருந்தார். வரமாலை மாற்றும் நேரத்தில் மணமகனின் பதற்றமான நடவடிக்கைகளை கவனித்த மணமகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரிடம் சில அடிப்படை கேள்விகளை கேட்டுள்ளார்.
வாய்ப்பாட்டைக் கேட்டு அதிர்ச்சி
அப்போது, இரண்டாம் வாய்ப்பாட்டைச் சொல்லுமாறு மணமகள் கேட்டுள்ளார். ஆனால் அனைவரின் முன்னிலையிலும் அந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மணமகன் தடுமாறியதாக தெரிகிறது. இதனால், திருமணத்துக்கு முன்பு மணமகன் கல்வித் தகுதி குறித்து கூறப்பட்ட தகவல்களில் உண்மை இல்லை என்பதை மணமகள் உணர்ந்ததாக கூறப்படுகிறது.
படிக்காத ஒருவரை கணவராக ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய மணமகள், வரமாலையை தூக்கி எறிந்துவிட்டு திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் மண்டபத்தில் இருந்த இரு வீட்டாருக்கும் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
காவல் நிலையம் வரை சென்ற பேச்சுவார்த்தை
மணமகளை சமாதானப்படுத்த மாப்பிள்ளை வீட்டார் மற்றும் உறவினர்கள் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். விவகாரம் காவல் நிலையம் வரை சென்ற நிலையில், போலீசார் முன்னிலையில் இரு குடும்பத்தினரும் பேசி சமரச உடன்பாட்டுக்கு வந்தனர்.
திருமணத்துக்காக மணமகள் வீட்டார் செலவு செய்ததாக கூறப்படும் ரூ.4 லட்சத்தை மணமகன் வீட்டார் திருப்பித் தர ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி குறித்து ஏற்பட்ட சந்தேகத்தால் திருமணம் நிறுத்தப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஐயோ.. தடுப்புசுவரில் மோதிய அடுத்த நொடி தீப்பற்றி எரிந்த கார்...! நடுரோட்டில் காரோடு கருகிய பிரபல மருத்துவர்... நெஞ்சை பதறவைக்கும் விபத்து..!!!