தேனீ, குளவி கொட்டினால் என்ன செய்ய வேண்டும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.!
விஷப்பூச்சி தாக்குதலில் உடனடி முதலுதவி மற்றும் அபாய அறிகுறிகள் இதுதான்.
தேனீ அல்லது குளவி கொட்டினால் என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது, அதன் அபாய அறிகுறிகள் மற்றும் உடனடி முதலுதவி குறித்து முழுமையான விளக்கத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
விழிப்புணர்வு அவசியம்:
நகர்ப்புறங்களிலும் விஷப்பூச்சிகளின் வரத்து அதிகரித்து வரும் நிலையில், தேனீ மற்றும் குளவி போன்ற பூச்சிகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. முன்பு கிராமப்புறங்களில் மட்டுமே காணப்பட்ட இவ்வகை பூச்சிகள், தற்போது குடியிருப்பு பகுதிகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்நிலையில் திடீரென தேனீ அல்லது குளவி கொட்டினால் எவ்வாறு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், எந்த செயல்களை தவிர்க்க வேண்டும் என்பதைக் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகிறது.
செய்யக்கூடாது:
தேனீ அல்லது குளவி கொட்டிய இடத்தில் கீறுதல், விஷத்தை வாயால் உறிஞ்சுதல், அதிக அழுத்தம் கொடுத்தல், தன்னிச்சையாக மருந்துகள் தடவுதல், தேவையில்லாமல் இறுக்கமாக கட்டுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். கொட்டிய இடத்தில் இருக்கும் கொடுக்கையை (stinger) கையால் பிடுங்க முயல்வது விஷம் மேலும் உடலுக்குள் செல்ல வழிவகுக்கும். இதனால் வீக்கம் மற்றும் வலி அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே பதற்றம் கொள்ளாமல் சரியான முறையில் முதற்கட்ட உதவியை மேற்கொள்ள வேண்டும்.
சிகிச்சை அவசியம்:
விஷப்பூச்சி தாக்குதலுக்குப் பிறகு சில அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம். மூச்சுத்திணறல், முகம், உதடு, நாக்கு அல்லது தொண்டை வீக்கம், கடும் தலைச்சுற்றல் அல்லது மயக்கம், தொடர்ந்து வாந்தி அல்லது வாந்தி உணர்வு, இதயத் துடிப்பு அதிகரித்தல், உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுதல், கடுமையான அலர்ஜி போன்றவை உயிருக்கு ஆபத்தான நிலையை குறிக்கக்கூடும். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.