புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
குடிபோதையில் குழந்தையை ஏற்றி கொன்ற தண்ணீர் லாரி டிரைவர்; துரத்திச்செல்லும் தாயின் பரிதாப வீடியோ காட்சி!
சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் தண்ணீர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஒன்றரை வயது குழந்தையின் மீது லாரியை ஏற்றி கொன்றுள்ளார். இதனை நேரில் பார்த்த குழந்தையின் தாய் கதறும் காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் வடக்கு ஜெகநாதன் நகர் தெருவில் வசித்து வருபவர் கலைவாணன் (27), இவரது மனைவி லட்சுமி (24). இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் மோகித் என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது லட்சுமி 7 மாத கர்ப்பமாகவும் உள்ளார்.
அன்று இரவு குழந்தை மோகித்திற்கு உணவு கொடுப்பதற்காக லட்சுமி வீட்டின் வெளியே வந்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த தண்ணீர் லாரி வீட்டின் முன் நின்று கொண்டு இருந்த குழந்தை மீது வேகமாக மோதி ஏறியது. இதில் தாய் லட்சுமி கண் முன்பாகவே குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.
கர்ப்பிணி பெண்ணான லட்சுமி தன் ஒரு கையால் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை வாரி அணைத்து கொண்டு, அலறியபடி குழந்தையை கொன்ற லாரியை துரத்தி பிடிக்க ஓடினார். அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் இந்த காட்சி பார்ப்போர் மனதை மிகவும் சோகத்தில் ஆழ்த்துகிறது. பின்னர் அங்கிருந்த மக்களும் திரண்டு வந்து லாரியைத் துரத்தி மடக்கிப் பிடித்தனர்.
லாரி டிரைவர் மணிகண்டனை (25) பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர். பின்னர் லாரி டிரைவரையும், லாரியையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.