மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
மெரினாவில் தன் உயிரை கொடுத்து சிறுவனின் உயிரை காப்பாற்றிய இளைஞர்!

என் உயிரைக் கொடுத்தாவது உன்னைக் காப்பாற்றுவேன் என்று நண்பர்களுக்குள் சொல்லிக்கொள்வதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் யார் என்றே தெரியாத ஒரு சிறுவனை தன உயிரை கொடுத்து காப்பாற்றியுள்ளார் சாலிகிராமத்தைச் சேர்ந்த பாண்டியராஜன்.
பொதுவாக விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரையில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வர். அதில் சிறுவர்கள் மற்றும் சில இளைஞர்கள் கடலில் குளிப்பதில் ஆர்வமாய் இருப்பர். இவர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சிலர் அவர்களின் கட்டுப்பாட்டையும் மீறி அனுமதிக்கப்படாத பகுதிகளுக்கு சென்று குளிக்கின்றனர். இதனால் அவர்கள் கடல் அலையால் அடித்து செல்லப்பட்டு உயிர் பறிபோகும் பரிதாப நிலை உண்டாகிறது.
இதேபோன்றுதான் நேற்று தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்தான் அந்த 15 வயது பள்ளி சிறுவன். திடீரென கடலின் உட்பகுதிக்கு சென்ற அந்த சிறுவன் நீரில் மிதந்தபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தான். அப்போது அங்கு அருகில் தன் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந் பாண்டியராஜ் என்ற 18 வயது கல்லூரி மாணவர் அந்த சிறுவனை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்துள்ளார்.
ஏதோ தமக்கு தெரிந்த அரைகுறை நீச்சலை வைத்துக் கொண்டு சிறுவனை காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் அந்த கல்லூரி மாணவர் நீந்தி சென்றார். அந்த சிறுவனை நெருங்கிய அந்த இளைஞர் சிறுவனை காப்பாற்றி வெளியில் கொண்டுவர முயற்சி செய்துள்ளார். ஆனால் அப்போது திடீரென வந்த ஒரு ராட்சத அலையால் இருவரும் கடலில் உட்புறமாக அடித்துச்செல்லப்பட்டனர்.
இவர்கள் தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்ட அங்கிருந்த மீனவர்கள் விரைந்து வந்து பள்ளி சிறுவனை மீட்டு விட்டனர். ஆனால் அவனை காப்பாற்ற சென்ற பாண்டியராஜனை எவ்வளவு தேடியும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு மணிநேரத்திற்கு மேலாக தேடியும் அந்த மீனவர்கள் கண்ணில் பாண்டியராஜ் தென்படவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு பாண்டியராஜ் பட்டினப்பாக்கம் கடற்கரையில் சடலமாக ஒதுங்கினார். சிறுவனை காப்பாற்ற கடலில் குதித்த இளைஞர் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தன் உயிரைக் கொடுத்து சிறுவனின் உயிரை காப்பாற்ற துணிந்த அந்த பாண்டியராஜ் சாலிகிராமம் தசரதபுரத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இவரின் துணிச்சலான செயலுக்கு பாராட்டு தெரிவிப்பதா இல்லை அவரது உயிர் பறிபோய் விட்டதே என பரிதாபப்படுவதா என மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இனியாவது கடற்கரைக்குச் செல்பவர்கள் பாதுகாப்பான முறையில் குளித்துவிட்டு உடனே வெளியில் வந்துவிடவேண்டும் என்று தமிழ் ஸ்பார்க் உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றது.