கட்டின தாலியில் ஈரம் கூட சரியா காயல..!! விருந்துக்கு சென்று வீடு திரும்பிய புதுப்பெண் மூளைச்சாவு அடைந்து மரணம்..



Young women dead in road accident after 4 days of marriage

விருதுநகர் அருகே திருமணம் முடிந்த நான்கு நாட்களில் புது பெண் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் மறவற்பெருங்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சங்கர் ராஜ் (27). சங்கர் ராஜ் சென்னையில் இயங்கிவரும் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் சங்கர் ராஜ் க்கும் விருதுநகர் அருகே உள்ள சுத்தமடம் என்ற கிராமத்தை சேர்ந்த வேலுசாமி என்பவரது மகள் முத்துமாரி (24) என்பவருக்கும் கடந்த 13 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் புதுமண தம்பதிகளாக சங்கர் ராஜ் மற்றும் அவரது மனைவி முத்துமாரி இருவரும் பந்தல்குடி பகுதியில் அமைந்துள்ள தங்கள் உறவினர்கள் வீட்டிற்கு விருந்திற்க்காக சென்றுவிட்டு, கடந்த 16 ஆம் தேதி தங்கள் இருசக்கர வாகனம் மூலம் மீண்டும் சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளனர்.

அப்போது அவர்கள் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தநிலையில், வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த முத்துமாரி தலை அடியாக சாலையில் விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டநிலையில், உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார் முத்துமாரி. அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்றுவந்தநிலையில், சிகிச்சை பலனின்றி முத்துமாரி மூளைச்சாவு அடைந்தார்.

பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின்படி முத்துமாரியின் உடலுறுப்புகளை அவரது உறவினர்கள் தானமாக வழங்கினர். முத்துமாரியின் இதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் போன்றவை தானமாக பெறப்பட்டு, அதன்மூலம் நான்கு பேருக்கு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது.

கட்டிய தாலியில் ஈரம் காய்வதற்கு முன்பே, இளம் பெண் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.