ஆன்லைன் கேமிற்கு அடிமையான சிறுவன்.!! செல்போனை மறைத்து வைத்த பெற்றோர்.! நொடிப்பொழுதில் உயிரைவிட்ட சிறுவன்.!



Young boy suicide for online game

குழந்தைகள் ஓடியாடி தெருவில் விளையாடிய காலம் மாறி, திரையில் விளையாடும் காலம் வந்து விட்டது. குழந்தை பிறந்த 4 மாதத்திலே பெற்றோர்களும் குழந்தைகளுக்கு வீடியோவை காட்டுகின்றனர். அதற்கு அவர்களது சுயநலம் தான் காரணம் என்றே கூறலாம். குழந்தை அழாமல் இருந்தால் போதும் என்று நினைத்தே செல்போனை காட்டுகின்றனர்.

தற்போது கொரோனா காலம் என்பதால் சிறுவர்கள் காலை எழுந்தது முதல் இரவு துாங்க செல்லும் வரை அலைபேசியில் வீடியோ கேம்களை பதிவிறக்கம் செய்து விளையாடுகின்றனர். செல்போனில் அதிகநேரம் வீடியோ கேம் விளையாடுவோருக்கு உடல், மன ரீதியாகவோ, குடும்ப வாழ்க்கையிலோ ஏதாவது பாதிப்பு வரலாம் என சிகிச்சையாளர்கள் கூறும் அறிவுரை பெற்றோர்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், ஆன்லைனில் கேம் விளையாடியதை கண்டித்து செல்போனை பெற்றோர் மறைத்து வைத்ததால் விரக்தி அடைந்த சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மகன் விமல்குமார் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். விமல்குமார், வீட்டில் எப்போதும் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். ஆனால் பெற்றோர் சொல்வதை கேட்காமல் மீண்டும் அவர் செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார்.

ஒருக்கட்டத்தில் பெற்றோர், விமல்குமாரிடம் இருந்து செல்போனை பறித்து, வீட்டில் மறைத்து வைத்துவிட்டனர். இதனால் விரக்தி அடைந்த விமல்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த அவரது பெற்றோர் விமல்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விமல்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.