கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்.! கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்றபோது சிறுவன் பரிதாப பலி.!

கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்.! கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்றபோது சிறுவன் பரிதாப பலி.!


young boy died while playing cricket

சென்னை வண்ணாரப்பேட்டை தங்கவேல் பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த முருகவேல் என்பவரின் மகன் தினேஷ் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்க படாததால் வீட்டிலே இருந்து வந்துள்ளான் மாணவன் தினேஷ். இந்தநிலையில், தினேஷ் நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளான்.

இதனையடுத்து, புதுவண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு வளாகத்தில் உள்ள விளையாட்டு திடலில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் சேர்ந்து தினேஷ் கிரிக்கெட் விளையாடியுள்ளான். அப்போது அருகில் இருந்த கிணற்றுக்குள் பந்து விழுந்துவிட்டதால், அந்த பந்தை எடுக்க தினேஷ் முயன்றுள்ளார்.  அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார் தினேஷ்.

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது சக நண்பர்கள், தினேசை காப்பாற்றும்படி அலறல் சத்தம் போட்டுள்ளனர். மேலும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க போராடியுள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். 

இதுபற்றி தகவல் கொடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வராததால் அரசியல் பிரமுகர் ராஜேஷ் என்பவர் தனது காரில் சிறுவனை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், தினேஷ் ஏற்கனவே நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.