எனக்கு மன அழுத்தம் தாங்க முடியவில்லை..! 8-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு.! அவன் எழுதிய உருக்கமான கடிதம்.!
சென்னை மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருண். இவரது மகன் ஆருஷ் என்ற சிறுவன் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அருண் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டனர்.
இதனையடுத்து நேற்று காலையில் அருண் மற்றும் அவரது மனைவி எழுந்து பார்த்தபோது அவர்களது மகன் ஆருஷ் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் அவரை தேடினர்.
அப்போது அதே அடுக்குமாடி முதல் தளத்தில் உள்ள பால்கனியில் ஆருஷ், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆருஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஆருஷ், நள்ளிரவில் எழுந்து அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது மாடி வராண்டாவில் உள்ள ஜன்னல் வழியாக அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. தற்கொலைக்கு முன்பாக ஆருஷ் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அந்த கடிதத்தில், எனக்கு மன அழுத்தம் தாங்க முடியவில்லை. எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. அம்மா, உனது உடலை நன்றாக பார்த்துக்கொள். அப்பா, நீங்கள் இதுபோல் எப்போதும் காமெடியாக பேச வேண்டும். அண்ணா, என்னை மன்னித்துவிடு என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.