பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த ரயில்வேத்துறை.!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடுமுழுவதும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மாநிலங்களுக்கு இடையே அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனாலும் புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது.
இந்தநிலையில், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் புறநகர் மின்சார ரயிலில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களும் புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவரும் பயணம் மேற்கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்தது. தற்போது இந்த மின்சார ரெயில்களில் அத்தியாவசிய பணிகளின் பட்டியலின் கீழ் வராத பெண்களும், அவர்களுடன் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் நாளை (23.11.2020) முதல் பயணிக்கலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், அத்தியாவசிய பணிகள் பட்டியலின் கீழ் வராத பெண் பயணிகள் சாதாரண நேரங்களில், அதாவது காலை 7 மணி வரையிலும், அதன்பின்னர் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், இரவு 7.30 மணிக்கு பிறகும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மின்சார ரெயில்களில் பயணிக்கலாம். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் மின்சார ரயில்களில் அத்தியாவசிய பட்டியலின் கீழ் வராத பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இவர்களுக்கான ரயில் டிக்கெட், சாதாரண நேரங்களில், தாங்கள் புறப்படும் ரெயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.