கணவனின் நடத்தையில் சந்தேகம்... தோழியுடன் மனைவி செய்த செயல்...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(36) -சண்முகபிரியா(32) தம்பதியினர். மணிகண்டன் துறையூர் மேட்டில் தென்னை நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வந்துள்ளார். சண்முகபிரியா அதே பகுதியில் உள்ள ரேசன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சண்முகபிரியாவுக்கு கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே கணவனுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணியுள்ளார். அதன்படி சண்முகபிரியா தனது தோழியான மாரியம்மாளுடன் சேர்ந்து கணவரை தாக்கி படுகாயம் ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்.
அதற்காக மதுரையை சேர்ந்த 8 பேர் கொண்ட கூலிப்படையை ரூ.3 லட்சத்துக்கு பேசி மணிகண்டனை தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மணிகண்டன் ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மணிகண்டனின் மனைவி சண்முக பிரியா மாரியம்மாளுடன் சேர்ந்து ரூ.3 லட்சம் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவி தனது கணவரை தாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சண்முகபிரியா, மாரியம்மாள் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.