இதை எங்கள் ஆட்சியில் தான் கொண்டு வந்தோம்.! மறுப்பு தெரிவித்த மா.சுப்பிரமணியன்.! ஆதாரத்துடன் கூறிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.!vijayabaskar-talk-about-entrance-exam

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த சிறப்பு சட்டபேரவை கூட்டத்தின்போது அதிமுக எம்.எல்.ஏ. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சி காலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நீட் தேர்வு எதிர்ப்பு வி‌ஷயத்தில் அ.தி.மு.க. ஒருபோதும் பின்வாங்கியது இல்லை. அதில் உறுதியாக உள்ளது. 2005-ம் ஆண்டுதான் முதல் முறையாக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்டு பேசிய தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2005-ம் ஆண்டில் நுழைவு தேர்வு வேண்டாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டதாக விஜயபாஸ்கர் கூறுவது தவறான தகவல் ஆகும். 2006-ம் ஆண்டில் கருணாநிதி இருந்தபோது தான் நுழைவுத்தேர்வு வேண்டாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார் என குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்து பேசிய விஜயபாஸ்கர், எங்கள் ஆட்சியில் 19.6.2005-ல் நுழைவு தேர்வே வேண்டாம் என்கிற அரசாணையை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதனை  திமுக ஆட்சியில் செயல்படுத்தினீர்கள் என பதிலளித்தார்.