தமிழகம்

பள்ளி வகுப்பறை மேசையில் சுருண்டு விழுந்த மாணவி பரிதாப பலி.. பதறவைத்த சிசிடிவி காட்சி.. வேலூர் பரபரப்பு..!

Summary:

Vellor 9th standard school student died at class

வேலூர் அருகே தனியார் பள்ளி மாணவி ஒருவர் வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி என்னும் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது 14 வயது மகள் நிவேதினி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார்.

இந்நிலையில் வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவி நிவேதினி திடீரென மயங்கி வகுப்பறை மேசையில் விழுந்துள்ளார். பதறிப்போன பள்ளி நிர்வாகம் மாணவியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு சென்ற மாணவியின் பெற்றோர் மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாணவி பரிதாபமாக  உயிர் இழந்துள்ளார். இதனை அடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மனைவியின் பெற்றோர் கூறுகையில், தங்கள் மகளுக்கு வலிப்பு வந்து  வகுப்பறையில் மயங்கி விழுந்துவிட்டதாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் பள்ளியில் இருந்து தகவல் வந்தது, அவர்கள் கூறிய மருத்துவமனைக்கு விரைந்து சென்ற நாங்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பாதி வழியிலேயே மகள் உயிர் இழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், மாணவி மயங்கி விழுந்த காட்சி பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.


Advertisement