தாய்-தந்தை இல்லை.. சத்துணவில் மதிய சாப்பாடு, 2 வேளை பட்டினி.. உதவிக்கரம் வேண்டி கண்ணீருடன் மழலைகள்.!

தாய்-தந்தை இல்லை.. சத்துணவில் மதிய சாப்பாடு, 2 வேளை பட்டினி.. உதவிக்கரம் வேண்டி கண்ணீருடன் மழலைகள்.!


Tiruvannamalai Arani 3 Children Live Without Parents They Died Want Help to Education and food

பெற்றோரை இழந்த 3 குழந்தைகள் இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் வசித்து, சத்துணவில் கொடுக்கப்படும் ஒருவேளை உணவை சாப்பிட்டு பரிதவித்து வரும் துயரம் ஆரணி அருகே நடந்துள்ளது. தமிழக அரசு தங்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்று அந்த 3 குழந்தைகளும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, ஆவணியாபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் லோகநாதன். இவர் டெய்லராக இருந்து வந்தார். இவரின் மனைவி வேண்டா. இந்த தம்பதிகளுக்கு கார்த்திகா (வயது 15), சிரஞ்சீவி (வயது 14), நிறைமதி (வயது 10) என 3 பிள்ளைகள் உள்ளனர். 

ஆவணியாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் கார்த்திகா 10 ஆம் வகுப்பும், சிரஞ்சீவி 9 ஆம் வகுப்பும், நிறைமதி 6 ஆம் வகுப்பும் பயின்று வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 4 வருடத்திற்கு முன்னதாக லோகநாதன் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். 

இதனால் வேண்டா 100 நாள் வேலைக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்த நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவரும் கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக பரிதாபமாக உயிரிழந்தார். தாய் - தந்தை என இருவரையும் இழந்த குழந்தைகள் 3 பேரும், தங்களின் வீட்டில் வசித்து வருகின்றனர். 

Tiruvannamalai

இவர்களுக்கு வருமானம் இல்லாத காரணத்தால், மதிய வேளையில் அரசுப்பள்ளியில் வழங்கும் சத்துணவை மட்டும் சாப்பிட்டு வசித்து வருகின்றனர். காலை மற்றும் இரவு வேளைகளில் உணவு கிடைக்காமல் பட்டினியால் தவித்து வருகின்றனர். 

குழந்தைகளின் சூழ்நிலையை உணர்ந்துகொண்ட உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், அவ்வப்போது தங்களால் இயன்ற உதவியை செய்து வந்தாலும், அவர்களிடம் தொடர்ந்து உதவி கேட்க தயக்கமாக இருக்கிறது என்றும் பிஞ்சுகள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். 

இவர்கள் மூவரும் வசித்து வரும் வீடும் அபாய நிலையில், எப்போதும் இடிந்து விழலாம் என்ற சூழலில் இருப்பதால், வீட்டிலும் அவர்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். இதனால் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தங்களை காப்பாற்ற வழிவகை செய்ய வேண்டும் என்றும் குழந்தைகள் கோரிக்கை வைத்துள்ளனர்.