சாலையில் கிடந்த ரூ.26 ஆயிரம்.. பெண் செய்த நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டுக்கள்.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, மேலப்புத்தநேரி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரின் மனைவி பொன்னம்மாள் (வயது 55). இவர் அங்குள்ள மகாராஜா நகரில் உள்ள வீட்டில் வேலைபார்த்து வருகிறார்.
இந்த நிலையில், பொன்னம்மாள் வழக்கம்போல வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். மகாராஜா நகர் பகுதி வழியாக செல்லும்போது, சாலையோரம் பை ஒன்று கேட்பாரற்று இருப்பதை கவனித்துள்ளார்.
பையை எடுத்து பார்த்த போது, அதில் ரூ.26 ஆயிரத்து 380 பணம் இருப்பது உறுதியாகவே, அங்கிருந்து பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் காவல் நிலையத்திற்கு சென்று விஷயத்தை கூறி பணத்தை ஒப்படைத்து இருக்கிறார்.
பணத்தை காவல் துறையினர்வசம் ஒப்படைத்த பொன்னம்மாளை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.