தி.மு.க கவுன்சிலர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம பெண்: பட்டப்பகலில் துணிகரம்..!The mysterious woman who showed up at DMK councilors house

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகேயுள்ள தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (57). இவர்  தி.மு.க மாவட்ட கவுன்சிலர். இவரது மனைவி மேகலா (52). இவர்களுக்கு திருப்போரூர் கந்தசுவாமி கோவில் சரவண பொய்கை குளம் அருகே இரண்டு தளத்துடன் வீடு மற்றும் வணிக வளாகம் உள்ளது. மேகலாவுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், திருப்போரூர் வீட்டில் இரண்டாவது தளத்தில் தங்கி கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த நிலையில், நேற்று காலை, மேகலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். மேகலாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டு வீட்டில் அமர்ந்துள்ளார். மேகலா தண்ணீர் கொடுத்த பின், உடனே மிளகாய் பொடியை மேகலாவின் கண்களில் தூவியுள்ளார். மேகலா தன் கண்களை துடைக்கும் நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரம் தாலி சரடு செயினை பறித்ததுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேகலாவின் கணவர் ஜெயச்சந்திரன் திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளர் லில்லி, துணை ஆய்வாளர் ராஜா மற்றும் காவல்துறையினர் வணிக வளாகம், ஓ.எம்.ஆர்.  சாலை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம பெண்ணை தேடிவருகின்றனர்.