தமிழகம்

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.! மீன் பிடித்து விளையாடிய போது சிறுவன் பரிதாப பலி.!

Summary:

சென்னையில் நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடித்து விளையாடி கொண்டிருந்த போது, கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்துள்ளான்.

சென்னை கொடுங்கையூர் அடுத்த சின்னண்டிமடம் பகுதியில் திறந்த வெளி ராட்சத கழிவுநீர் கால்வாய் உள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்ததால் இந்த கழிவுநீர் கால்வாயில் மழை நீர் நிரம்பி ஓடுகிறது. இதில் சிறுவர்கள் தூண்டிலில் மீன் பிடித்து விளையாடி வருகின்றனர்.

இந்தநிலையில் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த கோமதி என்பவரின் மூத்த மகன் முகேஷ் நேற்று மதியம் சிறுவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். அப்போது திடீரென கால்வாய் தண்ணீருக்குள் தவறி விழுந்து தத்தளித்துள்ளான் முகேஷ். ஒருகட்டத்தில் வேகமாக சென்ற தண்ணீரில் சிறுவன் அடித்துச்செல்லப்பட்டான்.

இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படகு மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சிறுவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Advertisement