தமிழகம்

சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்!

Summary:

Tamil speaking security guards at Chennai airport

தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சில தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையை முடித்து செல்லும்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கனிமொழியிடம் இந்தியில் கூறினார்.

ஆனால், எம்.பி கனிமொழி எனக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசுங்கள் என கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் அதிகாரி நீங்கள் இந்தியரா? என்று கனிமொழியிடம் கேட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கனிமொழி, “இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பது எப்போதில் இருந்து முடிவு செய்யப்பட்டது என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இந்தி திணிப்பு” என்று கூறியிருந்தார்.


அதனை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில், உங்களுடைய விரும்பத்தகாத அனுபவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட எந்தவொரு மொழியையும் வலியுறுத்துவது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கொள்கை அல்ல என்று பதிவு ஒன்றை வெளியிட்டனர்.

மேலும் சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக மத்திய தொழிற்பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்தி தெரியாததால் கனிமொழி எம்.பி.யை இந்தியரா? என கேள்வி எழுப்பிய பெண் காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


Advertisement