தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
மாதம் ரூ.1000 பெற தகுயானவரா நீங்கள்?: உங்களுக்காகவே தொடங்கியுள்ளது சிறப்பு முகாம்..!
அரசுப்பள்ளிகளில் படித்த மாணவிகள் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.1,000 பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவியருக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவிகளின் கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்ததை உறுதிப்படுத்தும் சான்று உள்ளிட்டவற்றுடன் மாணவிகளின் வங்கிக்கணக்கு விவரம் உள்ளிட்ட ஆவணங்களை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியரை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற வேண்டும். மேலும் அவற்றை சமூகநலத்துறையின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் காரணமாக சான்றிதழ்களை பெறும் பணியை விரைவாக செயல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தொடங்கும், இதன் மூலம் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியான மாணவியர் கண்டறியப்படுவர். கல்வி வளர்ச்சி நாளான ஜூலை 15 ஆம் தேதி, இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார் என்று உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், தகுதியான மாணவிகளின் பெயர்களை பதிவு செய்ய இன்று முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கென பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இந்த திட்டத்திற்கு தகுதி வாய்ந்த மாணவிகள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்காக மாணவிகள் தங்களின் விவரங்கள், வங்கிக் கணக்கு விவரம், ஆதார் எண், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.