தமிழகம்

குடிபோதை ஆசிரியர்கள்! பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை! புரட்டிஎடுத்த பொது மக்கள்!

Summary:

school teachers sexual torture to student


தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் வரலாறு பாட ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் லட்சுமணன் (38), சின்னமுத்து (34). இவர்கள் இருவரும் பள்ளிக்கு வரும்போது பல நேரங்களில் மது அருந்தி வருவதாகவும் வகுப்பறையில் போதையில் பாடம் நடத்துவதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் ஆசிரியர்கள் லட்சுமணன், சின்னமுத்து ஆகிய  இருவரும், அதேப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு,  காதல் கவிதைகள், ஆபாச வார்த்தைகள், ஆபாச படங்களை அனுப்பி செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அந்த மாணவி அதிர்ச்சி அடைந்து ஏன் இதை அனுப்புனீர்கள் என ஆசிரியர்களிடம் கேட்டுள்ளார் , அதற்கு ஆசிரியர்கள் இதனை வெளியில் யாரிடமாவது கூறினால் மதிப்பெண்களை குறைத்து விடுவோம் என 2 பேரும், அந்த மாணவியை மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன அந்த மாணவி பாலியல் தொல்லை குறித்து வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இதனை சாதகமாக எடுத்துக்கொண்ட பள்ளி ஆசிரியர்கள், நேற்று முன்தினம் குடிபோதையில் பள்ளிக்கு வந்த நிலையில் இருவரும் மாணவியிடம் அத்து மீறி நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி மாலையில் பள்ளி வகுப்பு நேரம் முடிந்ததும் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். 

இதனையடுத்து ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்த து 100-க்கும் மேற்பட்டோர், பள்ளிக்கு திரண்டு சென்று ஆசிரியர்களிடம் இதுபற்றி கேட்டுள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். இதுபற்றி கேட்டபோது  எந்த பதிலும் கூறாமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் ஆசிரியர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். 

சம்பவம் குறித்து தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். பின்னர் ஆசிரியர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்து, கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.


 


Advertisement