சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை; அதிர்ச்சியில் மாணவர்கள்..!
சென்னை அண்ணா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் சங்கர் ஐஏஎஸ் அகாடமி. தமிழகத்தின் முதல் ஐஏஎஸ் பயிற்சி மையம் இதுவேயாகும்.
இந்த நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்று பலர் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் ஆகிய உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். இதனால் இந்த நிறுவனமானது மிகவும் பிரபலமடைந்து வருகின்றது. தற்போதும் கூட இந்த நிறுவனத்தில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் நிறுவனராக செயல்பட்டு வந்தவர் சங்கர். திருச்செங்கோட்டைச் சேர்ந்த சங்கர் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 45 வயதாகும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நிறுவனர் சங்கருக்கும், அவரது மனைவி வைஷ்ணவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் படுக்கை அறையில் சங்கர் தூக்கில் தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சங்கரின் உடலை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.