காலைக்கடனை கழிக்க சென்ற விசிக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை.. இராணிப்பேட்டையில் பதற்றம்., போலீஸ் குவிப்பு.!
இயற்கை உபாதையை கழிக்க சென்ற வி.சி.க பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவை, மழையூர் பஜனைகோவில் தெருவில் வசித்து வருபவர் பார்த்தீபன் (வயது 36). இவர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஆவார். பார்த்தீபன் இராணிப்பேட்டை நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ் கருணாவின் கார் ஓட்டுநராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் செய்யாத்து சுடுகாடு அருகே இயற்கை உபாதையை கழிக்க சென்ற பார்த்தீபன், மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் கலவை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கலவை காவல் துறையினர், பார்த்தீபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் லேசான பதற்ற சூழல் இருப்பதால் கூடுதல் காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.