ராமேஸ்வரம் பாலத்தில் பயங்கர விபத்து.. கார் மோதியதில் 2 சக்கர வாகன ஒட்டி கடலில் பறந்து விழுந்ததால் பேரதிர்ச்சி.!

ராமேஸ்வரம் பாலத்தில் பயங்கர விபத்து.. கார் மோதியதில் 2 சக்கர வாகன ஒட்டி கடலில் பறந்து விழுந்ததால் பேரதிர்ச்சி.!



rameshwaram-car-and-bike-accident

கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் 200 அடி உயரத்திலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் அருகாமையில் உள்ள பாம்பன் பகுதியில் வசித்து வருபவர் நாராயணன் மற்றும் முகேஷ். இவர்கள் இருவரும் இன்று மதியம் இருசக்கர வாகனத்தில் மண்டபத்தில் இருந்து பாம்பன் நோக்கி பாம்பன் பாலம் வழியாக சென்றுள்ளனர்.

இந்த நிலையில், பாலத்தின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. 

இதில் கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகிய இரண்டும் நொறுங்கிய நிலையில், கார் மோதிய விபத்தில் முகேஷ் 200 அடி பாலத்திலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டுள்ளார். அத்துடன் பாலத்தில் விழுந்த நாராயணன் பலத்த காயமடைந்த நிலையில், முகேஷ் கடலில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடியுள்ளார்.

Rameshwaram

இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து உயிருக்கு போராடிய முகேஷை கயிறு மூலம் மீட்டுள்ளனர். இதனையடுத்த எந்தவித ஆபத்துமின்றி முகேஷ் உயிர் தப்பியதை தொடர்ந்து, அவரது காலில் எலும்பு முறிவு மட்டும் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து தகவலறிந்த பாம்பன் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் காயமடைந்த நாராயணன் மற்றும் முகேஷ் ஆகிய இருவரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், இந்த விபத்திற்கு முக்கிய காரணம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய சிவகங்கை மாவட்டம், புதூரை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் தான் என தெரியவந்துள்ளது. எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.