மொய்விருந்தில் கிடைத்த 31 லட்சம்.! மொத்த பணத்தையும் கோவிலுக்கு கொடுத்த புதுக்கோட்டை நபர்!



pudukottai gave money to shivan temple

மொய் விருந்து விழா மூலம் வந்த, 31 லட்சம் ரூபாயை, சிவன் கோவில் கட்ட நன்கொடை வழங்கிய குடும்பத்துக்கு பாராட்டு குவிகிறது.

சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முதன் முதலில் மொய்விருந்து விழாக்கள் தொடங்கப்பட்டது. அது மெல்ல மெல்ல வளர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவி தற்போது இந்த மொய் விருந்து விழாக்கள் இந்த பகுதி மக்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாகவும் மாறிப்போனது. இந்த மொய்விருந்து விழாக்களில் சிசிடிவி கேமிரா காட்சி, துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலர்கள், தனியார் வங்கி சார்பில் அமைக்கப்பட்ட ஸ்டால் என அமர்க்களமாய் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த பாலவேலாயுதம் என்பவர் 18 ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.பாலவேலாயுதம் சார்பில், அவரது மகன் ரெங்கேஸ்வரன் மற்றும் குடும்பத்தினர், நெடுவாசலில் இரண்டுத்தினங்களுக்கு முன்பு மொய் விருந்து நடத்தினர். அந்த மொய் விருந்தில், 31 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் வந்தது. இதை அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிவன் கோவில் கட்டுமான பணிக்காக, கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர்.

pudukkottai

ஏற்கனவே இக்கோவில் கட்டுமான பணிக்கு, பால வேலாயுதம், 16 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். இந்தநிலையில் இவரது குடும்பத்தினரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். இதற்கு முன்பு நெடுவாசல் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.