"சாலை வசதி இல்ல., அவசர ஊர்தியும் வரல".. பைக்கில் கொண்டுசெல்லப்பட்ட கர்ப்பிணி..! செல்லும் வழியில் நடந்த கொடூரம்..!!

"சாலை வசதி இல்ல., அவசர ஊர்தியும் வரல".. பைக்கில் கொண்டுசெல்லப்பட்ட கர்ப்பிணி..! செல்லும் வழியில் நடந்த கொடூரம்..!!


pregnant lady dead after baby birth

சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்கு செல்லும் வழியிலேயே குழந்தையும், தாயும் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர், பீஞ்சமந்தை சின்னஎட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் கொள்ளையன் (வயது 28). கொள்ளையனின் மனைவி காஞ்சனா (வயது 22). கொள்ளையன்-காஞ்சனா தம்பதிக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

தற்போது காஞ்சனா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதற்காக எலந்தம்புதூர் மலை கிராமத்தில் இருக்கும் தனது தாயாரின் வீட்டில் அவர் சமீபமாக தங்கி இருந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் பிரசவ வலியானது ஏற்பட்டுள்ளது. கணவரும் வெளியூருக்கு கூலி வேலைக்கு சென்று விட, அருகில் இருந்தவர்கள் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அவசர ஊர்தி அங்கு வராத நிலையில், உறவினர்கள் பிரசவ வலியால் துடித்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சரியான சாலை வசதி கூட இல்லாததால் அவசரமாக செல்ல முடியாத நிலையில், வலியால் துடித்த காஞ்சனாவுக்கு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆண்குழந்தை இறந்து பிறந்துள்ளது. 

vellore

இதனை தொடர்ந்து காஞ்சனாவும் அதிக ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த வட்டார மருத்துவ அலுவலர் காஞ்சனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஏற்பாடு செய்துள்ளார். 

இதற்கு மறுப்பு தெரிவித்த பொதுமக்கள் போராட்டம் நடத்தவே, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் தாசில்தார் பேசுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சாலை வசதி இருந்திருந்தால் எங்களது பெண்ணும், குழந்தையும் எந்த சேதமும் இன்றி வீட்டிற்கு வந்திருப்பார்கள் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

மேலும், "சாலை வசதியும் இல்ல. அவசர ஊர்தியும் வரல. அதனால எங்க பொண்ணு இறந்துவிட்டாள்".இதற்கு பதில் என்ன? என்று கேட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சாலை அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இனி இப்படி நடக்காது என்று அரசு அலுவலர்கள் கூறியதால், காஞ்சனாவின் உடல் பிரேத  பரிசோதனை நடத்தப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.