தமிழகம்

முதல்வர் அறிவித்த பொங்கல் பரிசு ரூ.2500.! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.!

Summary:

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவதற்கானஅரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

பொங்கல் பரிசாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி நேற்றைய தினம் அதிரடியாக அறிவித்தார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய போது, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

வழக்கமாக பொங்கல் பரிசாக 1,000 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் இரண்டரை மடங்கு உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழக மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பரிசு ஆரம்ப கட்ட அறிவிப்பு தான், இன்னும் பல்வேறு திட்டங்களை அரசு அறிவிக்க உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. 2.06 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுடன் இலங்கை தமிழர்களின் 18,923 அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. 

அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யக்கூடிய 3,75,235 சர்க்கரை அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும். ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக ரூ.5,604.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


Advertisement