தமிழகம்

வரமுடியாத நிலையில் கணவன்.! பிரசவ வலியால் துடி துடித்த இளம் பெண்..! உதவிய காவல் ஆய்வாளர்.! குவியும் வாழ்த்துக்கள்.!

Summary:

Police officer helped pregnant women

ஊரடங்கு காரணமாக கணவன் சென்னையில் சிக்கிக்கொண்ட நேரத்தில், பிரசவ வலியால் துடித்த இளம் பெண்ணிற்கு காவல் ஆய்வாளர் ஒருவர் செய்த உதவி அனைவரையும் நெகிழ்ச்சியடையவைத்துள்ளது.

மதுரை தேவி நகர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஸ்ரீமதி. நிறைமாத கர்ப்பிணியான ஸ்ரீமதி மதுரையில் உள்ள தனது வீட்டில் வசித்துவருகிறார். மணிகண்டன் சென்னையில் வேலைபார்த்துவருகிறார். ஸ்ரீமதிக்கு பிரசவ நாள் நெருங்கிவரும் நிலையில், மணிகண்டன் என்னேரமும் மதுரை வர தயாராக இருந்துள்ளார்.

ஆனால், திடீரென போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மணிகண்டனால் மதுரைக்கு வரமுடியவில்லை. இந்நிலையில், ஸ்ரீமதிக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. ஸ்ரீமதிக்கு தந்தை இல்லை என்பதால் கணவனையே நம்பி வாழ்ந்துள்ளார். கணவன் அருகில் இல்லாததால், தனது கணவரின் உறவினர் முருகேசன் என்பவருக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார்.

முருகேசனும் பலஇடங்களில் தேடியும் மருத்துவமனைக்கு செல்ல வாகனம் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் அழுதுகொண்டே அருகிலிருந்த காவல் சோதனைச் சாவடி மையத்திற்குச் சென்று விவரத்தைக் கூறியுள்ளார். முருகேசனின் நிலையை புரிந்துகொண்ட காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் முருகேசனுக்கு உதவ முன்வந்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவை மீறி, அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி அதற்கு தண்டனையாக சம்பந்தப்பட்ட பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அந்த பெண்ணின் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணை காரில் ஏற்றி, அந்த கார் ஓட்டுனருக்கு டீசல் செலவிற்கு பணமும் கொடுத்து மருத்துவமனையில் அனுமதிக்க கூறியுள்ளார்.

சரியான நேரத்திற்கு கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்த  காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணனுக்கு சக போலீசாரும், பொதுமக்களும் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர்.


Advertisement