தமிழகம்

நல்ல மனசு சார் உங்களுக்கு!! தங்கம், பணத்துடன் ரயில் நிலையத்தில் கிடந்த கைப்பை! உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ் அதிகாரி..

Summary:

ரயில் பயணி தவறவிட்ட கைப்பையை போலீசார் உரிய பயணியிடம் ஒப்படைந்த சம்பவம் நடந்துள்ளது.

ரயில் பயணி தவறவிட்ட கைப்பையை போலீசார் உரிய பயணியிடம் ஒப்படைந்த சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்லும் உழவன் ரயில் நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்தை கடந்து சென்ற சிறிது நேரத்தில் கும்பகோணம் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் கைப்பை ஒன்று கிடந்துள்ளது.

ரயில் நிலையத்தில் பணியில் இருந்த கும்பகோணம் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் கைப்பை ஒன்று தனியாக கிடப்பதை பார்த்துள்ளார். உடனே அங்கு சென்று அந்த பையை சோதனை செய்தபோது, அந்த பைக்குள் 3 பவுன் தங்க நகை, ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.5,200 பணம், விசிட்டிங் கார்டு உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

உடனே அந்த விசிட்டிங் கார்டில் இருக்கும் தொலைபேசி எண்ணிற்கு போன் செய்த காவலர் சிவராமன் பையை தவறவிட்டு சென்ற பயணிக்கு தகவல் கொடுத்துள்ளார். தனது பையை தவறவிட்டதை தெரிந்து பதறிப்போன பயணி, உடனே ரயிலில் இருந்து இரங்கி கார் மூலம் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்து தனது கைப்பையை பெற்றுக்கொண்டார்.

பின்னர் காவலர் சிவராமனுக்கு நன்றி சொன்ன அந்த பயணி மீண்டும் கும்பகோணத்தில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றார். நேர்மை தவறாமல் கண்ணியத்துடன் நடந்துகொண்ட காவலர் சிவராமனுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Advertisement