தமிழகம்

பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி பெண்..! ஓடிசென்று உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்..!

Summary:

Police fined auto driver who helped pregnant women during lockdown

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண் ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவில் இலவசமாக ஏற்றிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தநிலையில் அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவரும் நிலையில் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 17.84 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராமகிருஷ்ணன் என்பவர் தனது பகுதியில் வசித்துவரும் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவவலி ஏற்பட்டதை அடுத்து, அந்த பெண்ணை இலவசமாக ஆட்டோவில் ஏற்றிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும்போது கோரிப்பாளையம் சிக்னலில் அவரை வழிமறித்து பிடித்த போலீசார், ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக கூறி 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். ஆனால் தான் ஏன் வெளியே சென்றேன் என்ற காரணத்தை ராமகிருஷ்ணன் பலமுறை கூறியும் போலீசார் கேட்பதாக இல்லை.

இதனால் மனம் நொந்துபோன அவர் அபராத தொகையை கட்டிவிட்டு, இதுகுறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்து வாட்ஸப்பில் பகிந்துள்ளார். குறிப்பிட்ட வீடியோ வைரலானதை அடுத்து, மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள், நடைபெற்ற சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்ததுடன் அபராதத் தொகையை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement