தமிழகம்

பார்க்கத்தான் எல்லாம் ஒரிஜினல் நோட் மாதிரியே இருக்கு!! ஆனால்..!! எடுத்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Summary:

ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து அதனை புழக்கத்தில் விட முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்

ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து அதனை புழக்கத்தில் விட முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காங்கேயம் அருகே திருப்பூர் சாலை பகுதியில் படியூர் சோதனை சாவடியில் போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை 5 மணியளவில் அந்த வழியாக வாகன பதிவு எண் பலகை இல்லாமல் ஒரு இருசக்கர வாகனம் வருவதையும் போலீசார் கவனித்துள்ளனர்.

உடனே போலீசார் அந்த வாகனத்தை நிறுத்த முயன்றபோது அந்த வாகனத்தில் வந்த நபர் போலீசாரை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தாமல் திருப்பி கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பின் தொடர்ந்து சென்று அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த பை ஒன்றை கைப்பற்றினர.

பின்னர் அந்த பையை சோதனை செய்தபோது அதில் முப்பத்தி ஒன்பது 2000 ரூபாய் தாள்களும், என்பத்து மூன்று 500 ரூபாய் தாள்களும், முப்பத்தி இரண்டு 200 ரூபாய் தாள்களும், முப்பத்தி ஒரு  நூறு ரூபாய்த் தாள்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் இருந்தது தெரியவந்தது.

இந்த கள்ளநோட்டுகள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுக்கும் இயந்திரம் மூலம் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு, அந்த கள்ள நோட்டுகள் அனைத்தையும் திருப்பூர் மாநகரில் புழக்கத்திற்கு விடுவதற்காக அந்த நபர் எடுத்துச் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

மேலும் அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த நபர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கல்லுக்கடை பகுதியைச் சேர்ந்த கண்ணன் 34 என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அந்த நபரை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தபோது ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுக்க பயன்படும் இயந்திரம் மற்றும் ஏற்கனவே ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு கட் பண்ணாமல் வைத்திருந்த முப்பத்தி ஆறு 2000 ரூபாய் நோட்டுகளை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று அவரை காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர். ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விடமுயன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement