சீசனுக்கு முன்பே கடும் பனிமூட்டம், குளிரை எதிர்கொள்ளும் நீலகிரி மக்கள்: 50 ஆண்டுகளுக்கு பின் திடீர் வானிலை மாற்றம்.!

சீசனுக்கு முன்பே கடும் பனிமூட்டம், குளிரை எதிர்கொள்ளும் நீலகிரி மக்கள்: 50 ஆண்டுகளுக்கு பின் திடீர் வானிலை மாற்றம்.!



Nilgiris Coonoor Winter Season 


நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் தொடங்கி, ஜனவரி வரையில் நீடிக்கும். அந்தவகையில், தற்போதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் நடப்பு ஆண்டில் மட்டும் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. 

மரங்கள் சரிந்து விழுந்தும், பாறைகள் சரிந்தும் விபத்துகள் ஏற்படுவதால் போக்குவரத்து அவ்வப்போது பிரச்சனையை சந்திக்கிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு படையினர் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே நீலகிரியில் பனிப்பொழிவானது அதிகரித்து இருக்கிறது. மேகக்கூட்டங்கள் தரையை தொட்டபடி தவழ்ந்து செல்கின்றன. குன்னூர் பகுதியில் பகலில் வேலையிலும் மேகங்கள் சூழ்ந்து கொள்கின்றன.

வாகன ஓட்டிகள் பகல் வேளையிலும் மேகமூட்டம் காரணமாக வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு பயணம் செய்கின்றனர். குளிர், மழைச்சாரல் என வானிலை மாறுவதால், குன்னூர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த 50 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறான அடர் பனிமூட்டம் என்பது நிலவுவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். நீலகிரியில் தொடர் மழையால் ஈரப்பதம் அதிகரித்து, உறைபனி தாக்கமும் விரைவில் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையமும் தெரிவித்து இருக்கிறது.