தமிழகம்

புளியமரத்தில் தொங்கிய பை..! பைக்குள் கதறிய 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை.! புதுக்கோட்டையில் நடந்த பரபரப்பு சம்பவம்.!

Summary:

New born baby hanged on tree near Pudukottai

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று புளிய மரத்தில் தொங்கிய ஜவுளிக்கடை கட்டைப்பையில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அமைந்துள்ளது இளங்குடி பட்டி. இந்த பகுதியில் அமைந்துள்ள கோவில் முன்பு உள்ள புளியமரம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஜவுளிக்கடை கைப்பை ஒன்று தொங்கியுள்ளது. சிறிது நேரத்தில் பைக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அருகில் சென்று பார்த்தபோது அந்த பைக்குள் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

உடனே இது குறித்து நமணசமுத்திரம் போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பைக்குள் இருந்த குழந்தையை மீட்டு புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

குழந்தைக்கு தற்போது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. குழந்தையை பைக்குள் வைத்து மரத்தில் தொங்க விட்டுச் சென்றது யார்? குழந்தையின் பெற்றோர் யார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று புளியமரத்தில் பைக்கில் வைத்து தொங்கவிடப்பட்டு சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement