நெல்லை கல்குவாரி விபத்து... 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

நெல்லை கல்குவாரி விபத்து... 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!



nellai-quarry-accident-case-filed-against-4-people

நெல்லை அருகே அடைமதிப்பான்குளம் கல்குவாரியில் பாறை சரிந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா கல்குவாரியில்  நேற்று  முன்தினம் நள்ளிரவு பாறை உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் மற்றும் பொக்லைன் எந்திர ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய்  உட்பட 6 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி பகுதி தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனும் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

ஆனால் இரவு நேரத்தில் மழை பெய்துகொண்டிருந்ததால் சுமார் 300 அடி பள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து போராடி பொக்லைன் ஆப்பரேட்டர்கள் முருகன் மற்றும் விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். 

மற்றவர்களை மீட்கும் பணிதொடர்ந்து நடைபெற்றது. அத்துடன் நெல்லை, கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து காரணமாக கல்குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டார். விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் குவாரியில் பணிகள் மேற்கொண்டதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இந்திய தண்டனை சட்டம் 304, 305A, 336 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் குவாரி உரிமையாளர் சங்கரநாராயணன், ஒப்பந்ததாரர் செல்வராஜ், மற்றும் மேலாளர் செபஸ்டின் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.