நீட் தேர்வில் சாதனை! இந்தியாவில் 7வது இடம்; தஞ்சை மாணவருக்கு குவியும் பாராட்டுகள்.!

நீட் தேர்வில் சாதனை! இந்தியாவில் 7வது இடம்; தஞ்சை மாணவருக்கு குவியும் பாராட்டுகள்.!



neet-exam-tamilnadu-student-charin-balaji-7th-place

நாடு முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த செரின்பாலாஜி என்ற மாணவர் தரவரிசையில் தமிழக அளவில் முதலிடத்தையும் இந்திய அளவில் ஏழாவது இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

மருத்துவ மேற்படிப்பான எம்டி, எம்எஸ் போன்ற படிப்புகளை பயில மத்திய அரசு நீட் தேர்வு முறையை கடந்த ஆண்டிலிருந்து கட்டாயமாக்கியுள்ளது. இதன்படி ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நீட் தேர்வு கடந்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகளானது கடந்த 31ஆம் தேதி வெளியிடப்பட்டு தரவரிசைப்பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது.

NEET exam

இந்நிலையில் சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வரும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த செரின் பாலாஜி என்ற மாணவர் தமிழக அளவில் முதலிடத்தையும் இந்திய அளவில் 7-வது இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

இது குறித்து செரின் பாலாஜி கூறுகையில்: நான் 10ம் வகுப்பு வரை தஞ்சையிலும், பிளஸ் 1, பிளஸ் 2வை திருச்சி எஸ்.ஆர்.வி மெட்ரிக் பள்ளியில் படித்தேன். பிளஸ் 2 வில் 1,180 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றேன்.

இந்நிலையில் இப்போது நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 7ம் இடத்தைப் பிடித்துள்ளேன். எனக்கு முன்புள்ள ஆறு பேர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே தமிழக அளவில் என்று பார்த்தால் முதலிடத்தைப் பிடித்துள்ளேன். மாநில அளவிலான தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் வெளியிடும். அப்போது தான் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்’. என்றார்.