வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.! இன்று பிரதமர் மோடி சென்னை வருகிறார்.! போக்குவரத்து மாற்றம்.!



modi come to chennai

பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக இன்று மாலை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை தரவுள்ளார். சுமார் 2 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் சாலை மார்க்கமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார்.

ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.

நேரு ஸ்டேடியத்துக்கு 5.45 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இரவு 7 மணி வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத்திட்டங்களை அவர் தொடங்கிவைத்து பேசுகிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் நேரு உள்விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள பெரியமேடு பகுதியைச் சுற்றியுள்ள ஈ.வெ.ரா சாலை, தாஷ்பிரகாஷ் முதல் சென்னை மருத்துவக்கல்லூரி வரையிலான சாலையில் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்ணா சாலை, ஜி.எஸ்.டி சாலை ஆகியவற்றில் போக்குவரத்து இயக்கம் மந்தமாக நடைபெறும் என்பதால் வாகன ஓட்டிகள் மாற்று சாலைகளை பயன்படுத்திக் கொள்ளவும் மாற்று வழிகளில் செல்ல முன்கூட்டியே திட்டமிடுமாறும் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.