ரூ.1000 உரிமை தொகை யாருக்கு கிடைக்கும்?!.. சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!!



M.K.Stalin explanation in the Assembly who will get Rs.1000 right amount

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தேர்தல் தி.மு.க  தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தது.

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே இந்த திட்டம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சிகள் உரிமை தொகை வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பி வந்தன. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு நடப்பாண்டு பட்ஜெட்டில் இடம் பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதற்கிடையே, கடந்த 20 ஆம் தேதி, நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பட்ஜெட் உரையில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமை தொகை குறித்த அறிவிப்பில் அடுத்த 7 மாதங்களுக்கு 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உரிமை தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக ரூ.1000 செலுத்தப்படும். நடைபாதைகளில் கடை நடத்துவோர், மீனவர்கள், கட்டுமான தொழிலில் பணிபுரிவோர், சிறிய கடைகள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட பெண்கள் இந்த திட்டத்தால் பயன்பெறுவார்கள்.

இந்த திட்டத்தை செயல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கிடும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாதம் ரூ.1000 கிடைத்தால் தங்களுடைய வாழ்வு சிறிதேனும் மாறும் என்று நம்பக்கூடிய எந்த குடும்பத் தலைவியையும் இந்த அரசு கைவிட்டுவிடாது என்ற உறுதியை அளிக்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.