நீங்கள் அவர்கள் எல்லோரையும் அழைத்து வாருங்கள்.! நான் ஒத்த ஆளாக வருகிறேன்.! சவாலுக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின் .!

நீங்கள் அவர்கள் எல்லோரையும் அழைத்து வாருங்கள்.! நான் ஒத்த ஆளாக வருகிறேன்.! சவாலுக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின் .!


mk-stalin-replied-to-edapadi

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் முக்கிய தலைவர்களாக இருந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாமல் முதல்முறையாக திமுகவும், அதிமுகவும் போட்டியிடுகிறது. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 

இந்நிலையில் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது கட்சி சார்பாக  மாவட்டம் மாவட்டமாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ஊழல் குறித்து நேரடி விவாதத்துக்கு தயாரா? என்று மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார். இதனையடுத்து இந்த சவாலை ஏற்றுக்கொண்டு ஊழல் புகார் பற்றி விவாதிக்க நான் ரெடி, நீங்கள் ரெடியா என்று முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்தார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் தயாரா? என்று முதலமைச்சர் பழனிசாமி நேற்று சவால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார். அதற்கு முன்னர் பழனிசாமி சில நடவடிக்கைகளைச் செய்து முடிக்க வேண்டும். நாளைக்கே உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து, 'சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த நெடுஞ்சாலைத்துறை ஊழல் மீதான சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்குங்கள். நான் வழக்கை சந்திக்கத் தயார் என்று பழனிசாமி உத்தரவு வாங்க வேண்டும்.

அதிமுக அமைச்சர்கள் மீது, எதிர்க்கட்சி தலைவர் தொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி வழங்குங்கள் என, ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நாளைக்கே நிறைவேற்றி, கவர்னரிடம் உடனே ஒப்படையுங்கள். வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக, என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கும் நானே அனுமதி தருகிறேன் விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என்று  கவர்னருக்கு கடிதம் எழுதுங்கள்.

அடுத்த நிமிடமே, விவாதத்திற்கு தேதி குறியுங்கள். எந்த இடம் என்று சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும் உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள். முடிந்தால் ஓ.பன்னீர்செல்வத்தையும் அழைத்து வாருங்கள். ஊழல் பற்றி விவாதிப்போம் என தெரிவித்துள்ளார்.